Showing posts with label @clean&green. Show all posts
Showing posts with label @clean&green. Show all posts

Sunday 25 2020

Kanyakumari history

 கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.

சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை (வயலை) உழப் பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்களின் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் மாற்றமடைந்ததாகத் தெரிகிறது.

 தற்போது கல்குளம்விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு(வேணாடு), சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்குச் சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்துப் பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால், விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609-ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மாமார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டுக் குழப்பங்களைச் சந்தித்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டைத் தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றி கொண்ட போதிலும், சந்தா சாகிபுவைச் சமாளிக்க முடியாததால், போர்க்களத்தை விட்டுப் பின்வாங்க வேண்டியிருந்தது. கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசைக் கைப்பற்றியது. வேணாடு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகைத் திருநாள் ராமவர்மனால் திருவிதாங்கூர் அரசாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு, இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.